Saturday, August 28, 2010

சென்னிமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

சென்னிமலை

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
ஈரோட்டிலிருந்து 26 கி.மீ. தூரத்திலும், பெருந்துறையிலிருந்து 13 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது சென்னிமலை. இங்கிருந்து எட்டு கி.மீ தூரத்தில் ஈங்கூர் இரயில் நிலையம் உள்ளது.

மலைக்கோவில்

கொங்கு நாட்டில் பழம் பெருமை பெற்றது சிரகிரி என்றும், சென்னியங்கிரி என்றும் சிறப்புப் பெயர் பெற்ற சென்னிமலை முருகன் கோயில். பழங்காலத்தில் கொங்கு மண்டலம் 24 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பகுதி பூந்துறை நாடு. அதிலுள்ளது தான் சென்னிமலை. வடமொழிப் பெயர் சிரகிரி என்பது. தேவராய சுவாமிகளும் இத்தலத்தைப் பாடிய அருணகிரி நாதரும் சிவகிரி என்று குறிப்பிட்டுள்ளனர்.

தலபுராணம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலை என்னும் நகரில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1749 அடி உயரத்தில் பசுமை நிறைந்த மரங்களாலும், மூலிகை குணம் கொண்ட செடி கொடிகளாலும் சூழப்பட்ட அழகிய மலையில் அமைந்துள்ளது. மலை 1700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அடிவாரத்திலிருந்து 1320 படிகளைக் கடந்து ஆலயத்தை அடையலாம். கோவில் நிர்வாகத்தில் கீழிருந்து மலைக்குச் செல்ல 4 கிலோ மீட்டர் தூரம் தார்சாலை அமைத்து வாகன (பேருந்து) வசதி செய்துள்ளனர்.
காஞ்சிமா நதி என்னும் நொய்யல் ஆறு ஆலயத்தின் தெற்குப் பகுதியில் ஓடுகிறது. ஆண்டவர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. முன்புறம் புளியடி விநாயகர் சந்நிதியும், அடுத்து கோயிலின் உட்புறத்தில் மூலவர் சென்னிமலை ஆண்டவருக்கு வலது பாகத்தில் மார்க்கண்டேசுவரர் மற்றும் உமையவல்லி அம்மன் சந்நிதிகளும், இடது பாகம் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன் சந்நிதிகளும் அமையப்பெற்றுள்ளன. அம்மன் சந்நிதியிலிருந்து பின்புறம் சென்றால் மலையின் உச்சியில் சித்தர் மகான்(பின் நாக்குச் சித்தர்) புண்ணாக்குச் சித்தர் கோயில் வேல்கள் நிறைந்த வேல் கோட்டமாக அமைந்துள்ளது. இதன் அருகே சரவண மாமுனிவரின் சமாதிக் கோயிலும் உள்ளது. இந்தக் கோயில் அருகே மிகப் பழமை வாய்ந்த குகை ஒன்றும் காணப்படுகிறது.

வரலாற்று பேரதிசயம்!!!

சென்ற 12-08-1984 அன்று இரட்டைக் காளை மாட்டுவண்டி புறப்பட்டுத் தங்கு தடையின்றி 1320 படிக்கட்டுகளையும் தாண்டி மலைக் கோயிலை வந்தடைந்தது. இந்தப் பேரதிசயம் நடைபெறுவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே வேட்டுவ பாளையம் பூசாரியார் வழித்தோன்றல் பொன்னுசாமித் தம்பிரான் மாட்டுவண்டி படிக்கட்டு வழியாக குறிப்பிட்ட நாளில் மலையேறப் போகிறது என்பதை தன் அருள் வாக்கு மூலம் தெரிவித்தார். இலட்சக் கணக்கான மக்கள் திரண்டு வந்து இந்த அதிசயக் காட்சியினைக் கண்டு களித்தனர்.

கந்தர் சஷ்டி கவசம்

உலகமெங்கும் உள்ள முருக பக்தர்கள் அனைவராலும் நாள் தோறும் மனமுருகிப் பாராயணம் செய்யப்படும் கந்தர் சஷ்டி கவசம் இயற்றியவர் பாலன் தேவராய சுவாமிகள். கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்ய வேண்டி முருகனை நினைந்து வேண்டியபோது, அரங்கேற்றம் செய்ய உரிய ஆலயம் சென்னிமலை ஆண்டவர் திருக்கோவில் தான் என்பதை அருளாணையால் உணர்ந்து, சென்னிமலைத் திருக்கோவிலில் சீரோடும் சிறப்போடும் கவசத்தை அரங்கேறினார். அன்று தொட்டு பல்லாயிரம் முருகபக்தர்கள் பாராயணம் செய்து வரும் அக்கவசத்தில் வருகின்ற “சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக” என்னும் அடி இத்தலத்தைக் குறிக்கும்.
சிரம்-சென்னி, கிரி-மலை.

மூலவர்

மூலவர் சென்னிமலை நாதன் நடு நாயக மூர்த்தியாக செவ்வாய்க் கிரகமாகஅமைந்திருக்க, மூலவரைச் சுற்றிலும் நவகிரகங்களின் எட்டு நாயகர்களும் அழகுடன் அமைந்து அருள் பாலிக்கிறார்கள். இங்கு மூலவரை வலம் வந்து வணங்கினாலே நவக் கிரகங்களையும் வணங்கி வழிபட்ட பலன் உண்டு. முருகன் சந்நிக்குப் பின்புறம் படிக்கட்டுகள் வழியாக மேலே சென்றால் அங்கு வள்ளி, தெய்வானை இருவரும் அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயர்களுடன் சென்னிமலையாண்டவரைத் திருமணம் செய்யத் தவமிருந்து இறைவனை அடைந்து அங்கேயே தனிப்பெருங்கோவில் கொண்டு பக்தர்களை அருள்பாலிக்கிறார்கள். அருள் மிகு வள்ளி மற்றும் தெய்வானை திரு உருவங்களும் ஒரே கல்லில் அமைக்கப் பட்டுள்ளது.

தனிச்சிறப்பு

சென்னிமலை ஆண்டவரின் தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய காரியங்களுக்கு திருக்கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் இரண்டு அழகிய பொதி காளைகள் மூலம் தினமும் அடிவாரத்திலிருந்து திருமஞ்சனத் தீர்த்தம் மலைக்குக் கொண்டு செல்லும் சிறப்பு தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பு.
மழையில்லாத வறட்சியான கோடை நாட்களில் கூட மலைக் கோயிலின் தென்புறம் அமைந்துள்ள விநாயகர் முன்புபொங்கி வழிந்தோடும் மாமாங்க தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பு வாய்ந்தது. பட்சி தீர்த்தத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அதில் நீராடுவோர் தோல் வியாதிகள் நீங்கப் பெறுகின்றனர். இம்மலையில் வெண்சாரை, வெண் தவளை, கரநொச்சி முதலிய சஞ்சீவி மூலிகைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
உடற்பிணி நீங்க வேண்டி பல தலங்கள் சென்று வழிபட்டு இத்தலத்தை வந்தடைந்து, சென்னிமலை ஆண்டவனை வணங்கி நோய் நீங்கப் பெற்றான் சோழ மன்னனான சிவாலயச் சோழன். அவன் தான் சென்னிமலைக் கோவிலை அமைத்ததாகக் கூறப்படுகிறது.
பக்தர்கள் புதிய வீடுகள் கட்டவும், தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம் குறித்தும், விவசாய பூமிகள் வாங்குவது, விற்பது, மற்றும் கிணறு வெட்டுதல், ஆழ்குழாய்க் கிணறு தோண்டுதல், புதிய வியாபாரங்கள் செய்ய கூட்டு சேர்தல், சேர்த்தல், புதியதாகத் தொழில் துவங்குதல், வியாதியின் சிகிச்சைக்காக மருத்துவ மனை செல்லுதல் முதலான அனைத்துமே முடிவு செய்ய சென்னிமலை ஆண்டவருக்கு அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்தரவு கேட்டு நல்ல உத்தரவு கிடைத்தபின் மன நிறைவோடு செயல்படுவது தொன்று தொட்டு நடந்து வரும் மிகப் பெரிய அற்புதமாகும். சிரசுப்பூ உத்தரவு நல்லபடியாகக் கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட செயல்களை பக்தர்கள் தவிர்ப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.