சிரகிரி வேலவன்

கந்தசட்டிக் கவசம் அரங்கேறிய திருத்தலம்
ஆதிசேடனுக்கும் வாயுதேவனுக்கும் ஒருமுறை கடுமையான பலப்பரீட்சை நடைபெற்றது. மாபெரும் மலையாகிய மாமேருவை அனந்தன் சுற்றி வளைத்துக் கொண்டான். வாயுதேவன் பெரும் காற்றை ஏற்படுத்தி அனந்தனிடம் இருந்து மாமேருவை மீட்க முயன்றான்.காற்றைபலமாக வீசியதால் மாமேருவின் சிகரப்பகுதி அனந்தனின் பிடியில் இருந்து நழுவிப் பறந்து சென்று வீழ்ந்தது. அப்படி விழுந்ததால் உருவாகிய மலையே சிரகிரி, சிகரகிரி,புஷ்பகிரி,மகுடகிரி,சென்னிமலை என்றெல்லாம் அழைக்கப்படலாயிற்று.இங்கு குடிகொண்டிருக்கும் சிரகிரி வேலவனை "சென்னிமலை முருகன்" என அடியார்கள் துதிப்பர்.




இங்கு முருகன் எழுந்தருளிய கதை முருகப் பெருமானின் அற்புதத்தை பாருக்கு உணர்த்துகின்றது.சென்னிமலைக்கு அருகில் நொய்தல் ஆற்றின் கரையில் கொடுமணல் என்னும் ஊரில் முற்காலத்தில் பண்ணையார் ஒருவர் ஒரு காராம் பசு உட்பட பல பசுக்களை வளர்த்து வந்தார். மாடுகளை மேய்க்கும் இடையன் ஒருசில நாட்களாக வனத்துக்குச் சென்றுவிட்டு மீண்டும் வருகின்ற காராம் பசுவின் மடியில் பால் வற்றியிருப்பது கண்டு வியந்தான். பண்ணையாரிடம் தெரியப்படுத்தினான். இருவரும் காராம் பசுவையும் ஏனைய பசுக்களையும் வழமைபோல் புல்மேய வனத்துக்கு அனுப்பிவிட்டு பின்னால் சென்றனர். காராம் பசு ஏனைய பசுக்களை விட்டு நீங்கிச் சென்று மண்மேடு ஒன்றில் தானாகவே பால் சொரிவதை அவதானித்தனர். குறித்த மணல்மேட்டை தோண்டிப் பார்த்தபோது முருகப் பெருமானின் கல் விக்கிரகத்தை கண்டு மனம் மகிழ்ந்தார். அழகாக இருந்த குறித்த சிலையின் இடுப்புப் பகுதிக்கு கீழ் முறையற்ற வேலைப்பாடு இல்லாது கரடு முரடாக இருக்கக் கண்டார். சிற்பியை அழைத்து கீழ்ப்பகுதியை திருத்தப் பணித்தார்.


உளியால் சிற்பி தட்டியபோது உதிரம் கற்சிலையில் இருந்து பெருக்கெடுப்பதைக் கண்ட சிற்பி பதறியடித்து "சாமிக் குற்றம்" ஆகிவிட்டது என்று பண்ணையாரிடம் தெரிவிக்கவே, முருகப் பெருமானின் விருப்பம் இவ்வண்ணம் இருப்பதே என்று உணர்ந்து அப்படியே தாபித்து கோயில் எழுப்பினார். இன்றும் கருவறையில் உள்ள இச்சிலையின் இடுப்புக்கு கீழான பாகத்தை வெள்ளிக்கவசத்தால் மறைத்து பூசை செய்கின்றனர்.




கந்த சட்டிக் கவசத்தை இயற்றிய பாலன் தேவராயன் சுவாமிகள் காங்கேயம் அருகில் உள்ள மடவிளாகம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் மைசூர் தேராச உடையாரின் காரியதரிசிகளில் ஒருவராக இருந்தவர். முருகப் பெருமானின் பணித்தமைக்கு அமைவாகவே சென்னிமலை முருகன் ஆலயத்தில் கந்தசட்டிக் கவசத்தை அருளிப் பாடி அரங்கேற்றினார். 'சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக" என்ற கந்தர் சட்டிக் கவச வரி இம்முருகப் பெருமானையே குறிக்கிறது.



அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடி படிக்காசு பெற்ற திருத்தலம் என்பது இவ்வாலய அருட்சிறப்பை மேலும் புலனாக்கிறது.

சிவாலயச் சோழன் கட்டப்பட்ட திருக்கோயில்வாகும். பிரம்மகித்தித் தோசம் பீடிக்கப்பட்ட மன்னன் தான் வழிபடும் சென்னிமலை முருகனை வழிபட்டு தோசத்தில் இருந்து மீள்வதற்கு ஆலயத்திற்கு வந்தார். அப்போது ஆலயத்தில் பூசகர் எவரும் இல்லாதது கண்டு மனம் நொந்து சகுனத் தடையென எண்ணி வாடினார். சிவாலயச் சோழனின் வாட்டத்தைப் போக்க அர்ச்சகர் உருவில் முருகப் பெருமானே எழுந்தருளி மன்னனுக்காக பூசை செய்து மன்னனைப் பீடித்திருந்த பிரம்மகித்தி தோசத்தைப் போக்கியருளினார்.

இத்தகு சிறப்புகள் கொண்ட
சென்னிமலை முருகனை வழிபட :- அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
சென்னிமலை,பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம். தொலைபேசி:- 04294 250223, 04294 250263(மலைக் கோயில்)

காலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.

சிரகிரி வேலவன் சீக்கிரம் வந்து தமிழர் துயரங்களை போக்க பக்தியோடு வழிபடுவோமாக.